புது டெல்லி – 2ஜி அலைக்கற்றை வழக்கில், தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் ஷியாமள் கோஷ் மற்றும் மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ சமர்பித்த குற்றப்பத்திரிக்கை முற்றிலும் இட்டுக்கட்டியது என்று கூறி டெல்லி தனி நீதிமன்றம் அவர்கள் மீதான அந்த குற்றப்பத்திரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது.
அவர்கள் மூலம் அரசிற்கு, 846.44 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ கூறியுள்ள நிலையில், நேற்று இந்த வழக்கு டெல்லி தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி, ஷியாமள் கோஷ் மற்றும் மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறான மற்றும் இட்டுக்கட்டியவை என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தை தவறாக வழி நடத்த சிபிஐ முயற்சிப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் சிபிஐ கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையை சிதைக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
2ஜி வழக்கில் நேற்றைய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.