சென்னை – நடிகர் சங்க விவகாரம் பெரிய அளவில் சர்ச்சைய கிளப்பி உள்ள நிலையில், நாளை மறுநாள் நேரடியான வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், நடிகர் சங்க பதவிகளுக்கு தமிழர்கள் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாரமிக்க பதவிகளுக்கு தமிழர்கள் அல்லாதவர்களையே ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது.”
“நடிகர்கள் சங்கம் மட்டுமல்லாமல் ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினர்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் தலைமைக்கும், நிர்வாக பதவிகளுக்கும் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம். உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாசார வேறுபாடின்றி இருக்கிறோம்.”
“நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்த துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன் தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்கு புரியாததல்ல. ஆகையால் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க பொறுப்பிற்கு போட்டியிடும் நடிகர்கள், தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்து தமிழர்களின் தன்மானத்தையும், உரிமையையும் காப்பாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் சர்ச்சைகளை கடுமையாக விமர்சித்த அவர், வாக்களிக்க இருக்கும் நடிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கும் தான் கூறியவற்றை சிந்தித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.