சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சங்கங்களின் பதிவாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவு பிரப்பித்த பிறகும் வழக்காடு மன்றம் வரை சென்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு பதிவாளரின் உத்தரவை இரத்து செய்து தேர்தலை நடத்த அனுமதி அளித்தார். அதே சமயம் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என்றும், வாக்கு பெட்டிகளை பாதுகாத்து வைக்கவும் ஜூன் 21-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜெயமணி, சுமதி, உட்பட பத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களையும் வழக்கில் இணைக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதற்கு அனுமதி அளித்து வருகிற 12-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். இதனால் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.