Home Featured நாடு மஇகா: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருக்கும்? மஇகா தேர்தல்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுமா?

மஇகா: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருக்கும்? மஇகா தேர்தல்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுமா?

675
0
SHARE
Ad

Palanivel Subra Comboகோலாலம்பூர் – நாளை (புதன்கிழமை) கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தரப்பினரின் மேல் முறையீடு மீதிலான தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை அறிந்து கொள்ள நாடு முழுமையிலும் உள்ள இந்திய சமுதாயத்தினரும், மஇகாவினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

காரணம், மஇகாவின் தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்ற முனைந்துள்ள பழனிவேல் தரப்பினரின் இறுதிக்கட்டப் போராட்டமாக நாளைய கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு பார்க்கப்படுகின்றது.

தீர்ப்பு என்னவாக இருக்கும்?

#TamilSchoolmychoice

Malaysia Courtsபழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்த சீராய்வு மனுவை நிராகரித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும் செய்த முடிவுகளை எதிர்த்து பழனிவேல் மற்றும் ஜோகூர் (டான்ஸ்ரீ) பாலகிருஷ்ணன் இருவரும் செய்துள்ள மேல்முறையீட்டு விண்ணப்பம்தான் நாளைக்கு விசாரணைக்கு வருகின்றது.

கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு என்பதற்கான நடைமுறைகளின்படி, முதலில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு தகுதியானதுதானா என்பதை ஆராய்ந்து கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்.

அத்தகைய அனுமதிக்கான விசாரணைதான் நாளை நடைபெறுகின்றது.

விசாரணையின் முடிவில் அனுமதி கிடையாது என கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்துவிட்டால், அத்துடன் பழனிவேல் தரப்பினரின் நீதிமன்றப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும்.

ஆனால், பழனிவேல் தரப்பினர் எதிர்பார்ப்பதுபோல் கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்க வாய்ப்பிருக்கின்றதா?

கூட்டரசு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்குமா?

G-Palanivel1பொதுவாக இதுபோன்ற முன் அனுமதி கோரும் வழக்குகளை மூன்று நீதிபதிகள் விசாரிப்பர். முன் அனுமதி கிடைத்து முழு விசாரணை நடைபெறும் பட்சத்தில் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள்.

முன் அனுமதி கோரும் தரப்பினர் இரண்டு அம்சங்களில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளைத் திருப்திப்படுத்த வேண்டும்.

முதலாவதாக இந்த வழக்கு பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு வழக்கு, ஒரு பரந்த தரப்பினரைப் பாதிக்கின்ற வழக்கு (Public interest) என்பதை மேல்முறையீடு செய்யும் பழனிவேல் தரப்பினர் நிரூபிக்க வேண்டும். இதனை நிரூபிப்பதில் பழனிவேலு-பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர்களுக்கு பிரச்சனை இருக்காது என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

காரணம், 6 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மஇகாவைப் பாதிக்கின்ற வழக்கு, ஓர் அரசாங்க இலாகாவான சங்கப் பதிவகத்திற்கு எதிரான வழக்கு என்பதால், இந்த அம்சத்தின் கீழ் கூட்டரசு நீதிமன்றம் முன் அனுமதியை வழங்கும்.

Dr Subra - MIC PRESIDENTஆனால், இரண்டாவதாக நிரூபிக்கப்பட வேண்டிய அம்சம்தான் சற்று சிரமமானது. இந்த இரண்டாவது அம்சத்தின்படி, விசாரணைக்கு வரும் மேல்முறையீடு சட்ட முரண்பாடுகளைக் கொண்டது என்றும், இதில் சட்டக் குழப்பங்கள் இருக்கின்றன என்பதால் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட வேண்டும் என்றும் நீதிபதிகளை பழனிவேலுவின் வழக்கறிஞர்கள் திருப்திப்படுத்த வேண்டும்.

இதிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், வழக்கிற்கான முன் அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் பின்னொரு தேதியில் முழுவிசாரணை ஐந்து நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெறும்.

இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

MIC-logoஇதற்கிடையில், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்அனுமதி நாளை கிடைத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உடனடியாக எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும், நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு கோரி விண்ணப்பிக்க பழனிவேலுவின் வழக்கறிஞர்கள் தயாராக இருப்பதாக, பழனிவேலு தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆக, நாளை மேல்முறையீடு தொடர்வதற்கு பழனிவேல் தரப்புக்கு முன் அனுமதி கிடைத்தால், அடுத்த வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைக்குள் பழனிவேலுவின் வழக்கறிஞர்கள், மஇகா தேர்தல்களுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு கேட்டு விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் நீதிமன்றம் அத்தகைய இடைக்காலத் தடையுத்தரவை வழங்குமா?

ஆக ஒட்டு மொத்த மஇகாவினரும், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கூட்டரசு நீதிமன்றம் முன் அனுமதி வழங்குமா?  

அப்படியே கிடைத்தால், முழு விசாரணைக்கு முன்பாக, மஇகா தேர்தல்களுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பழனிவேல் தரப்பினர் பெற இயலுமா?

விடைகளுக்காகக் காத்திருக்கின்றது மஇகா!

-இரா.முத்தரசன்