புதுடெல்லி – காற்றில் கலந்து வரும் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு வருவதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள டெல்லி பசுமை தீர்ப்பாயக் குழு, அது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சிடம் முறையிட்டு வருகின்றது.
இதற்கு முன்பு, ‘ஓசோன் படலம் சேதமடைவது, இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல அனைத்துலக அளவிலான பிரச்சனை’ என்று அமைச்சு கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அம்முறையீடு நேற்று மீண்டும் விசாரணை வந்தது, அப்போது நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாயக் குழு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அலட்சியப் போக்கை கடுமையாக சாடியது.
அதேவேளையில், அவர்கள் வெளியிட்ட ஆய்வுத் தகவலில் கூறியிருப்பதாவது:-
“ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன”
“இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.