ஈப்போ – தாப்பாவில் தொடர் கொலைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் மெக்கானிக், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களை காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி செண்டெரியாங், கம்போங் சுங்கை லா பகுதியைச் சேர்ந்த 46 வயதான நிலத் தரகர் மாயமானதைத் தொடர்ந்து பேராக் காவல்துறை நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
நிலப் பிரச்சனைகள் காரணமாக நிலத்தரகர் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆரம்பக் கட்ட விசாரணையில், அந்த மெக்கானிக்கும், அவரது மூத்த மகனும், முதல் கொலையில் ஈடுபட்டிருப்பதையும், கொலை செய்யப்பட்டவரின் உடல் எரித்து சாம்பலாக்கப்பட்டு, அவர்களின் பணிமனை அருகில் உள்ள குட்டியில் வீசப்பட்டிருப்பதையும் காவல்துறை கண்டறிந்துள்ளது.
அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் அந்த முறையிலேயே எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டில் ஒருவரும், கடந்த 2014-ம் ஆண்டு இருவரும், அண்மையில் ஒருவரும் என மொத்தம் நான்கு கொலைகளும் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இளம் வயதில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த மெக்கானிக்கிற்கு தற்போது 57 வயதாகிறது. ஏற்கனவே அவர் மீது கொள்ளை, ஏமாற்றுவேலை போன்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி ஸ்டார் இணையதளம்