கோலாலம்பூர் – “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி யானைக்கு மட்டுமல்ல பல தருணங்களில் மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரங்கள் சிலர் தாங்கள் உயிருடன் இருந்த போதும், இறந்த பிறகும் பல மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டுபவர்களாகவே உள்ளனர்.
அவர்களின் பெயர், புகைப்படங்கள், அவர்களின் உடமைகள் உள்ளிட்ட பலவற்றின் உலகளாவிய பயன்பாட்டின் மூலம் ஆண்டுதோறும் அவற்றிற்கான ஆதாய உரிமையாக பல மில்லியன் டாலர்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
அத்தகைய நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர்களை கீழ் காண்க:
பாப் இசையின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் புகழின் உச்சியில் இருக்கும் போது எப்படி செல்வச் செழிப்பில் இருந்தாரோ அவர் இறந்து பல வருடங்கள் ஆன பிறகும் அவரது பெயருக்கும், செல்வத்திற்கும் குறைவே இல்லை. இவரின் இத்தகைய சாதனைகளை மற்றொருவர் முறியடிக்க முடியுமா? என்பது சந்தேகமே.
இறந்த பிறகும் இவரின் பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் போன்றவற்றின் மூலம் இவரது வருமானம் 115 மில்லியன் டாலர்களாக உள்ளது என்று கூறப்படுகிறது.
‘கிங் ஆப் ராக் அன் ரோல்’ என்று அழைக்கப்படும் எல்விஸ் பிரெஸ்லி தனது பாடல்கள் மற்றும் நடிப்பின் மூலம் அமெரிக்கர்களை கட்டிப் போட்டவர். 1977-ம் ஆண்டு தனது 42-வயதில் மறைந்த இவருக்காக இன்றும் ஆண்டுதோறும் 55 மில்லியன் டாலர்கள் வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.
36 வருடங்களே வாழ்ந்த ஜமைக்கன் ரேக்கே இசைக்கலைஞர் பாப் மார்லே இன்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கிறார். பணம், புகழ் குறித்து அவர் கூறிய கருத்துக்களும், பேட்டிகளும் வருடங்கள் கடந்தும் நட்பு ஊடகங்களில் உலா வந்து கொண்டே இருக்கின்றன. மார்லே பிவரேஜ், ஹவுஸ் ஆப் மார்லே ஆகிய நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டாலர்கள் வருவாய் வருகிறது.
தற்போதய தகவல்படி அந்த வருவாயின் மதிப்பு ஆண்டுக்கு 21 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.
எலிசபெத் டெய்லர்
பிரிட்டிஷ்-அமெரிக்க நடிகையான எலிசபெத் டெய்லர், கடந்த 2011-ம் ஆண்டு தனது 79-வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் ஒய்ட் டைமண்ட் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களுக்கு இன்றும் அவர் தான் மாடல் அழகி. இதன் மூலம் டெய்லர் பெயருக்கு 20 மில்லியன் டாலர்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
50-களில் உலகை தனது நடிப்பாலும், அழகாலும் ஆராதிக்க வைத்த அமெரிக்க நடிகை மர்லின் மன்றோவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. மன்றோ கஃபே மற்றும் அவரது எஸ்டேட் உள்ளிட்ட பல சொத்துக்கள் மூலம் இன்றும் வருவாய் பெருகிக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் 17 மில்லியன் டாலர்கள் ஆகும்.
சார்லஸ் ஷூல்ஸ்
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் ஷூல்ஸ் உருவாக்கிய கேலிச் சித்திரங்கள் இன்றும் அவரின் ‘பீனட்’ (Peanuts) காமிக் அச்சுகள் மூலம் பிரபலமாகவே உள்ளன. இதன் மூலம் சுமார் 40 மில்லியன் டாலர்கள் வருவாய் வருவதாகக் கூறப்படுகிறது.
ஜான் லெனான்
1960-ம் ஆண்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உருவாக்கப்பட்ட ‘தி பேட்டில்ஸ்’ (The Beatles) இசைக்குழுவின் மிக முக்கிய பாடகர் ஜான் லெனான். பாடல்கள் மட்டுமல்லாமல் இவரது அரசியல் கருத்துக்களாலும், அமைதி வாதத்தினாலும் பல லட்சக்கணக்கானோர் இவரைப் பின்பற்றினர். எனினும், அதுவே இவருக்கு எதிராக அமைந்தது. இவர் தனது 40-வது வயதில் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது பாடல்களுக்கு இன்றும் இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுக்க மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் 12 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.
– சுரேஷ்