Home Featured நாடு மஇகா: புதிய பொறுப்பாளர்கள் யார்? அடுத்த மத்திய செயலவைக்குள் அறிவிக்கப்படலாம்!

மஇகா: புதிய பொறுப்பாளர்கள் யார்? அடுத்த மத்திய செயலவைக்குள் அறிவிக்கப்படலாம்!

846
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – மஇகாவின் தேர்தல்கள் நடந்து முடிந்த பின்னர் அடுத்த கட்ட எதிர்பார்ப்பாக, மஇகா முழுவதும் தற்போதும் பரபரப்பாக விவாதிக்கப்படுவது கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களாக யார் தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்பதுதான்.

மஇகாவின் தேசியத் தலைவர் ஒருவர், தலைமைச் செயலாளர், தலைமைப் பொருளாளர், தகவல் பிரிவுத் தலைவர் என மூன்று முக்கியப் பொறுப்பாளர்களைத் தனது அதிகாரத்தின் கீழ் நியமிக்க மஇகா அமைப்பு விதிகள் இடமளிக்கின்றன.

இவர்களைத் தவிர 9  மத்திய செயலவை உறுப்பினர்களை தேசியத் தலைவர் நியமிக்கலாம் என்றும் மஇகா அமைப்பு விதி இடமளிக்கின்றது.

#TamilSchoolmychoice

இம்மாத இறுதிக்குள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மத்திய செயலவை தனது முதல் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தக் கூட்டத்தின்போது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது நியமனத்தின் கீழ் வரும் புதிய பொறுப்பாளர்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைமைச் செயலாளர் யார்?

P. Kamalanathanகட்சியின் தலைமைச் செயலாளராக கல்வி துணையமைச்சர் பி.கமலநாதன் (படம்) நியமிக்கப்படலாம் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 14வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்பதால், தலைமைச் செயலாளராக பொறுப்பேற்பவர், மிகவும் பளுவான பணிகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கவராக இருக்கவேண்டும் என்பதோடு, கட்சியைப் பிரதிநிதித்து தேசிய முன்னணிக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு செயலாற்ற வேண்டிய திறன் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்நிலையில் ஒரு துணையமைச்சராகவும் இருப்பதால் கமலநாதனே அதற்குப் பொருத்தமானவர் என்ற எண்ணத்தில் டாக்டர் சுப்ரா இருக்கலாம் என்றும் அதன் காரணமாகத்தான் கமலநாதனும் நடந்து முடிந்த தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிடாமல் மத்திய செயலவைக்குப் போட்டியிட்டதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமலநாதனும் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் 1145 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார். அதற்கான வெகுமதியாகவும் அவருக்கு தலைமைச் செயலாளர் பதவி அளிக்கப்படலாம் என்றும் சில மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் எந்த அணியிலும் இல்லாத, நடுநிலையாளராக கமலநாதன் பார்க்கப்படுவதால்,  மஇகாவின் நடப்பு அரசியல் சூழ்நிலையில் கமலநாதனே பொருத்தமான தலைமைச் செயலாளராக பாரபட்சமின்றி செயல்படுவார் என்றும் மஇகா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தலைமைப் பொருளாளர் யார்?

V.S.Mohanமஇகாவின் அடுத்த முக்கியப் பதவியான தலைமைப் பொருளாளர் பதவிக்கு டத்தோ வி.எஸ்.மோகன் (படம்) அல்லது முன்னாள் தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

டத்தோஸ்ரீ வேள்பாரியின் பெயரும் தலைமைப் பொருளாளருக்கான ஆரூடங்களில் ஒன்றாகப் பேசப்படுகின்றது.

நடப்புப் பொருளாளரான டத்தோ ஜஸ்பால் சிங் தேசிய உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மற்றொருவர் தலைமைப் பொருளாளராக நியமிக்கப்படவிருக்கின்றார்.

தகவல் பிரிவுத் தலைவர் யார்?

நடப்பு தகவல் பிரிவுத் தலைவரான வி.எஸ்.மோகனுக்குப் பதிலாக இளைஞர், விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் பொருத்தமானவராக இருப்பார் என்ற ஆரூடங்கள் மஇகாவில் வலம் வருகின்றன.

Saravanan - MIC -மத்திய செயலவை நியமன உறுப்பினராக சரவணன் முதலில் தேசியத் தலைவரால்  நியமிக்கப்பட்டு, பின்னர் தகவல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசியத் துணைத் தலைவர் போட்டியில் சரவணன் தோல்வியடைந்துவிட்டதால் தற்போது அவர் மத்திய செயலவை உறுப்பினராகக் கூட இல்லை. எனவே, 9 நியமன உறுப்பினர்களில் அவருக்குத்தான் முதல் வாய்ப்பை டாக்டர் சுப்ரா வழங்கி மீண்டும் அவரை மத்திய செயலவைக்குள் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு சில புதியவர்களை கட்சிக்குள் கொண்டுவர டாக்டர் சுப்ரா திட்டமிட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நியமன மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட பலரும் டாக்டர் சுப்ராவை அணுகி வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத் தலைவர்களும் மாற்றப்படலாம்!

இவர்களைத் தவிர மாநிலத் தலைவர்கள் வரிசையிலும் சில மாற்றங்களை தேசியத் தலைவர் செய்வார் எனக் கருதப்படுகின்றது.

Jaspal Singh Dato Senatorகுறிப்பாக, கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக சரவணனுக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்படுவாரா அல்லது சரவணனே மீண்டும் மாநிலத் தலைவராகத் தொடர அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் மஇகா கூட்டரசுப் பிரதேச தொகுதித் தலைவர்கள் காத்திருக்கின்றனர்.

கெடா மாநிலத் தலைவரான ஜஸ்பால் சிங் (படம்) உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவரும் கெடா மாநிலத் தலைவராகத் தொடர்வாரா அல்லது புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது சிலாங்கூர் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் சுப்ரா, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பாரா அல்லது வேலைப் பளு காரணமாக மற்றொருவருக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுப்பாரா –

அப்படியானால் சக்தி வாய்ந்த, நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான சிலாங்கூரின் தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பும் கட்சியில் மேலோங்கியுள்ளது.

இருப்பினும், கடுமையான அரசியல் சர்ச்சைகளையும், எதிர் அணிகளையும் கொண்ட சிலாங்கூர் மாநிலத் தலைமையை சுப்ராவே தொடர்ந்து ஏற்று, அந்த மாநிலத்தை நிர்வகித்து வருவார் என்றும் கூறப்படுகின்றது.

அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு தேசிய முன்னணி செயல்பட்டு வரும் பட்சத்தில்,

அந்த நோக்கத்தை அடைய இந்திய வாக்குகள்தான் முக்கிய பங்காற்றும் என்பதாலும்,

தேசியத் தலைவரே நேரடியாக களம் இறங்கி, சிலாங்கூர் மாநிலத்தை முன்னின்று தலைமையேற்று நடத்தினால்தான் தேசிய முன்னணியின் நோக்கம் நிறைவேறுவது சாத்தியம் என்பதாலும் –

தேசியத் தலைவர் சுப்ராவே, சிலாங்கூர் மாநிலத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்