கோலாலம்பூர்- மலேசியாவில் நிலவி வரும் சில சர்ச்சைகள் தொடர்பில் தம்மால் கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திட்டவட்டமாகக் கூறினார்.
பிரதமர் நஜிப்புடன் அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தையின்போது…
ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இச்சமயம் அவரிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு தயக்கமின்றிப் பதிலளித்தார்.
“அமெரிக்காவில் நடைபெறும் சில விசாரணைகள் தொடர்பில் நான் எந்தவித கருத்தும் தெரிவிக்க இயலாது. அதேபோல் நான் பயணம் மேற்கொள்ளும் நாட்டில் நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்தும் நிச்சயமாக கருத்து தெரிவிக்க மாட்டேன்” என்றார் ஓபாமா.
சனிக்கிழமை இரவு ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த தலைவர்களுக்கு நஜிப் அளித்த விருந்துபசரிப்பில் பிரத்தியேக உடையில் ஒபாமா…
எனினும் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல், சிறந்த ஆட்சி முறைக்கான முக்கியத்துவம் ஆகியவை குறித்து பிற நாட்டுத் தலைவர்களுடன் விவாதிப்பதைப் போலவே மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புடனும் தாம் இவ்விஷயங்கள் குறித்துப் பேசியதாக ஒபாமா கூறினார்.
“சமூக இயக்கங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினேன். மேலும் ஊடக சுதந்திரம் தேவை என்பது குறித்தும் மலேசிய பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என்று ஒபாமா மேலும் தெரிவித்தார்.