அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையின் போது மேடையில் தலைவர்களுக்காக பின்பற்றப்படும் இருக்கை வரிசை அமைப்பில் எந்தவித மாற்றமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்னோவின் 2015ஆம் ஆண்டுக்கான பொதுப்பேரவை டிசம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது. இச்சமயம் வழக்கமான நடைமுறையின்படி கட்சியின் துணைத் தலைவர், தேசியத் தலைவர் அருகேதான் அமர்வார் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
இளைஞர், மகளிர் பகுதிகளை திறந்து வைக்க மொகிதினுக்கு வாய்ப்பில்லை
ஆனால், ஆண்டுதோறும் நிகழ்ந்து வரும் பாரம்பரியத்துக்கு மாறாக, அம்னோவின் இளைஞர், மகளிர் பகுதிகளைத் திறந்து வைக்கும் உரிமை இந்த ஆண்டு மொகிதினுக்கு வழங்கப்படவில்லை.
கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துக்களை அவர் உதிர்க்கக் கூடும் என்ற அச்சத்தில் நஜிப்பின் தலைமைத்துவம் இவ்வாறு செய்துள்ளதாக கருதப்படுகின்றது.
இந்நிலையில், அவர் மேடையில் துணைத் தலைவருக்கான அந்தஸ்தோடு அமர வைக்கப்படுவாரா, அம்னோ பொதும் பேரவையில் உரையாற்ற அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முதலில் தகவல் ஊடகங்களுக்குக் கூட அனுமதியில்லை, குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற செய்தி வெளியானது. ஆனால், பின்னர் இந்த நடைமுறை மீட்டுக் கொள்ளப்பட்டு அனைத்து ஊடகங்களும் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அம்னோ பொதுப் பேரவை குறித்து பேசும்போது, அனைத்து வகையிலும் அம்னோ வலுவான கட்சி என்று குறிப்பிட்ட துணைப் பிரதமர் சாஹிட், கட்சியின் உச்ச தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகள் தொடர்பில், கட்சியின் இதர சக்தி வாய்ந்த பிரமுகர்கள் கூறும் கருத்துக்களுக்கு எப்போதும் அம்னோ மதிப்பளித்து வருகிறது என்றார்.
“அதே சமயம் கட்சித் தலைமைத்துவம் எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். தேசிய, மாநில, தொகுதி, அடிமட்டத் தொண்டர்கள் என அனைத்து தரப்புகளிலும் கட்சித் தலைமைத்துவத்துக்கு ஆதரவு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவெனில், மேற்குறிப்பிட்ட அனைத்துமே அம்னோவை வலுப்படுத்துவதற்கானது என்பதுதான்” என சாஹிட் ஹாமிடி மேலும் கூறினார்.