Home Featured தமிழ் நாடு 2016-ன் துருப்புச் சீட்டு தேமுதிக – பயன்படுத்திக் கொள்வாரா விஜயகாந்த்?

2016-ன் துருப்புச் சீட்டு தேமுதிக – பயன்படுத்திக் கொள்வாரா விஜயகாந்த்?

623
0
SHARE
Ad

vijayakanthசென்னை – தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்று செயல்படுத்திய நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களால் கிடைத்த நற்பெயர், கடைசி ஒன்றரை வருடங்களில் அவர் சந்தித்த சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு, மதுவிலக்குப் போராட்டம், அமைச்சர்களின் மந்தமான செயல்பாடுகள் காரணமாக சரிவை சந்தித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூட பிரபல வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், அதிமுக, திமுகவிற்கு இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் வெறும் 2.81 சதவீதமே இருப்பது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியோ? என்று யோசிக்க வைக்கிறது.

அதிமுகவிற்கு எதிராக அந்த இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு, அதில் நம்பகத்தன்மை இருக்காது என ஆளும் தரப்பு மனதை தேற்றிக் கொண்டாலும், நடுநிலையாளர்கள் மத்தியிலும், புதியதாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள் மற்றும் ஏற்கனவே வாக்களித்த இளைஞர்கள் மத்தியிலும் பரவலாக ஏமாற்றமும், வெறுப்பும் இருப்பதைக் காணமுடிகிறது.

#TamilSchoolmychoice

இது திமுகவிற்கு சாதகமாக அமையுமா?  என்றால் கண்டிப்பாக இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. திமுகவின் மீது ஏற்பட்ட வாரிசு அரசியல் மற்றும் ஊழல் புகார்கள் குறித்த கறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விடவில்லை. அதன் வெளிப்பாடு தான்karunanithi மேற்கூறிய கருத்துக் கணிப்பு முடிவுகளும், நட்பு ஊடகங்களில் எழுப்பப்படும் விமர்சனங்களும். ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’  பயணத்தை கூட விளம்பர யுக்திதான் என பலரும் கேலிக் கூத்தாக்கியது நாம் அறிந்த ஒன்று தான்.

அப்படி இருக்கையில் இது யாருக்கு சாதகமாக அமையும் என்றால் கண்டிப்பாக விஜயகாந்திற்கு தான் என்பது மறுக்க முடியாத உண்மை. வைகோ, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் போன்றோரும் திமுக-அதிமுகவை கடுமையாக விமர்சித்தாலும், விஜயகாந்திற்கு கிடைக்கும் வரவேற்பு அவர்களைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகவே இருக்கிறது.

எனினும் இந்த வரவேற்பு அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்குமா? என்றால் கண்டிப்பாக இல்லை. ஜெயலலிதா-கருணாநிதிக்கு சமமாக விஜயகாந்த், தமிழகத்தில் அரசியல் தலைவராக இன்னும் வளர்ந்து விடவில்லை. அப்படி இருக்கையில் 2016-ல் விஜயகாந்த் தமிழக முதல்வராக வருவதற்கு வாய்ப்பு குறைந்தபட்ச சதவீதம் கூட இல்லை.

jayaவிஜயகாந்த் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், ஒன்று அவர் தேர்தல் சமயத்தில், தனது தலைமையில் மக்கள் நல இயக்க கட்சிகளை ஒன்றிணைத்து திமுகவை நிர்பந்தம் செய்து கூட்டணி ஆட்சியோ அல்லது துணை முதல்வர் பதவியோ பெற வேண்டும்.

அப்படி இல்லை என்றால் மக்கள் நலக் கூட்டணியுடன் காங்கிரசையும் இணைத்து வலிமையான மூன்றாவது அணி அமைத்து திமுகவை விட அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அப்படி ஒருவேளை நடக்குமாயின் திமுக ஓரங்கட்டப்பட்டு, 2016-க்கு அடுத்த தேர்தல் தேமுதிகவின் ஆட்சியாக இருக்க வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படி இருந்தாலும் 2016 தேர்தலில் ஆட்சியை முடிவு செய்ய இருக்கும் துருப்புச் சீட்டு விஜயகாந்த் தான். அதை சாதகமாக்கிக் கொள்வதும், தவற விடுவதும் கேப்டனின் தீர்ப்பில் தான் உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

– சுரேஷ்