மும்பை – நடிகர் சல்மான் கான் குடிபோதையில் சாலையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் இறுதி தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வழங்கியது. இதில் நடிகர் சல்மான் கான் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாகக் கூறி நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி , சல்மானை விடுதலை செய்தார்.
இந்த வழக்கின் பின்னணி பின்வருமாறு:
கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடிகர் சல்மான்கான், மும்பை பாந்திரா பகுதியில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஆரம்பத்தில், இந்த வழக்கு மும்பை குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, பின்னர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில், செஷன்ஸ் நீதிமன்றம், சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும், குற்றம் புரிந்ததற்காக அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அதன் பின்னர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சல்மான் கானுக்கு, உடனடி ஜாமீன் கிடைத்தது. மேலும், சல்மான் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனுத் தாக்கலும் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து விசாரணைகளின் முடிவில், இன்று அவருக்கு விடுதலை அளித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டது, அவரது ரசிகர்களையும், பட தயாரிப்பாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், பொது நோக்கர்கள் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.