கோலாலம்பூர் – சிரியா மற்றும் கசகஸ்தானில் இயங்கி வரும் இரண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் சுமார் 500 சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வருவதாக புக்கிட் அமானின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து புக்கிட் அமான் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ ஆயுப் கான் மைடின் பிச்சை கூறுகையில், “அவர்கள் தென்கிழக்கு ஆசியாவில் குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலுள்ள சிறார்களைக் குறி வைத்துள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
“காரணம், சிரியாவிலுள்ள பயிற்சி மையங்களில் இந்தோனேசிய பாஷையும் ஓர் அங்கமாக இடம் பெற்றுள்ளது. அந்தச் சிறார்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் அவர்கள் வளர்ந்த பின்னர், தங்களின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப போரிடுவார்கள் என ஐஎஸ் அமைப்பு நம்புகின்றது” என்றும் ஆயுப் கான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஜெமா இஸ்லாயியா போன்ற செயல்முறைப் பயிற்சி மையங்களை மலேசியாவிலும், ஆசியாவைச் சேர்ந்த நாடுகளிலும் கொண்டு வரவுள்ளதாக நாங்கள் எண்ணுகின்றோம் என்றும் ஆயுப் கான் தெரிவித்துள்ளார்.
அது போன்ற பயிற்சி மையங்களில் தற்போது மலேசியாவைச் சேர்ந்த சிறார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆயுப், அது போன்ற தகவல்கள் காவல்துறைக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், மலேசியச் சிறார்கள் அங்கு பயிற்சியில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.