சென்னை – தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளன. இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் மக்கள், ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஜெயலலிதா தமிழக மக்களுக்காக மிக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் தமிழக அரசு முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது என்றும், அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் தன்னலமற்ற சேவை ஆற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்று கூறியுள்ள அவர், இறுதியாக, “உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன் – கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.