சிட்னி – வடக்கு ஆஸ்திரேலியாவில் சரக்கு இரயில் ஒன்று தடம்புரண்டதில் அதில் இருந்து 31,500 லிட்டர் சல்பூரிக் அமிலம், சுமார் 26 பெட்டிகளில் இருந்து வெளியேறியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் அரிசான் லிமிடட் என்ற நிறுவனத்தின் சரக்கு இரயில், 819,000 லிட்டர் சல்பூரிக் அமிலத்துடன் சென்று கொண்டிருந்த வேளையில், குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் தடம்புரண்டுள்ளது.
இது குறித்து குயின்ஸ்லேண்ட் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்த இரயிலில் பெட்டிகளில் ஏற்பட்ட சேதத்தினால், அதில் இருந்து 31,500 லிட்டர் சல்பூரிக் அமிலம் வெளியேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அமிலம் வெளியேறிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சோதனையிட்டு அதில் அமில பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுவரையில், அமிலம் வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ள அரிசான் நிறுவனம், காயமடைந்த தங்கள் 3 இரயில் ஓட்டுநர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வந்தவுடன் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.