சிங்கப்பூர் – சிங்கப்பூர் பிரஜைகள் தங்களின் சுய திறனை பல்வேறு வகையில் மேம்படுத்திக் கொள்ள, அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறது. அந்தத் திட்டத்தின் படி, 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதில் உள்ளவர்கள் பல்வேறு படிப்புகள் மூலம் தங்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்துக் கொள்ள, 500 சிங்கப்பூர் டாலர் வழங்கப்பட இருக்கிறது.
ஏறக்குறைய 57 பிரிவுகளில் இருக்கும் 10,000 பயிற்சி வகுப்புகள் மூலம் சிங்கப்பூர் பிரஜைகள் தங்களுக்கு விருப்பமான திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்திய கணக்கெடுப்பின் படி, 2 மில்லியன் சிங்கப்பூர் பிரஜைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற இருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
இது பற்றி சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஆங் யீ குங் கூறுகையில், “குடிமக்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்வதற்கு வழி செய்யும் இந்தத் திட்டம், வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனை வெறும் பண மானியமாக மட்டும் பார்க்க வேண்டாம். நாம் அனைவரும் நமது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக தெளிவாக திட்டமிடப்பட்ட அடையாளமாகவே இதனை பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகைக்கு கால வரையறை இல்லை என்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில், அரசு மீண்டும் தொடங்கும் என்பதும் இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகும்.