பிலடெல்பியா – அமெரிக்காவின் பெனிசில்வானியா மாநிலத்தின் காவல் துறையினர் பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் பில் கோஸ்பி (படம்) மீது நீதிமன்றத்தில் பாலியல் தாக்குதல் புகார்கள் அடங்கிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இருப்பினும் பில் கோஸ்பியின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை நியாயமில்லாதது என்றும் இதனை எதிர்த்து இறுதிவரை போராடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
2004ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களுக்காக பில் கோஸ்பி இப்போது நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படுகின்றார்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் காவல் துறையினர் வெளியிட்ட பில் கோஸ்பியின் அதிகாரபூர்வ புகைப்படம்
நேற்று புதன்கிழமை நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகை தந்த பில் கோஸ்பி, 1 மில்லியன் டாலர் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டதோடு அவரது அனைத்துலகக் கடப்பிதழும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது.
பல முறை பில் கோஸ்பி மீது பாலியல் புகார்கள் எழுந்தாலும் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதன் முறையாகும்.
ஜனவரி 2004ஆம் ஆண்டில் டெம்பள் பல்கலைக்கழக பணியாளர் அண்ட்ரியா கொண்ஸ்டாண்ட் என்பவரை பில் கோஸ்பி போதைப் பொருள் கொடுத்து, மயக்கம் கொள்ளவைத்து அவரை மானபங்கம் செய்தார் என்ற புகார் செய்யப்பட்டது. பில் கோஸ்பி மீது புகார் கொடுத்த முதல் பெண்மணியும் இவர்தான்.
அதன் தொடர்பில்தான் நேற்று பில்கோஸ்பி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
ஏற்கனவே, 10 பெண்கள் பில் கோஸ்பிக்கு எதிராக அவதூறு வழக்குகளைத் தொடுத்திருக்கின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலங்களில் நகைச்சுவை நடிகராகவும், தனியாக மேடைப் பேச்சு மூலம் நகைச்சுவை வழங்குவதுமாக (stand-up comedy) தனது கலையுலக வாழ்க்கையைத்தொடக்கிய பில் கோஸ்பிக்கு தற்போதைய வயது 78.
ஒருகாலத்தில் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் சக்கைப் போடு போட்ட குடும்பத் தொடர் ‘பில் கோஸ்பி ஷோ’ மூலம் மிகப் பிரபலமான பில் கோஸ்பி அதன் மூலம் கோடிக்கணக்கான வருமானத்தையும் பெற்று ஒரு காலத்தில் ஹாலிவுட் திரையுலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.