இந்தப் படம் நாளை வெள்ளிக்கிழமை முதல் தமிழகமெங்கும் வெளியிடப்படுகின்றது. காவல் துறையின் இணைபிரியாத ஓர் அம்சமாக மாறிவிட்ட ‘எண்கவுன்டர்’ எனப்படும் எதிராளியை மடக்கி சுட்டுத் தள்ளும் காவல் துறையின் போக்கை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்கின்றது இந்தப் படம்.
மலேசியாவில் இந்தப் படம் டிஜிவி திரையரங்குகளைக் கொண்ட டிஜிவி சினிமாஸ் நிறுவனம் மற்றும் ஆஸ்ட்ரோவின் இணை வெளியீடாக மலேசியாவில் திரையீடு காண்கின்றது. ஆஸ்ட்ரோவின் பங்களிப்போடு திரையீடு காணும் முதல் தமிழ்ப் படமாக ‘தற்காப்பு’ திகழ்கின்றது. இதற்கு முன் சில உள்நாட்டுப் படங்களின் வெளியீட்டில் மட்டும் ஆஸ்ட்ரோ ஈடுபட்டு வந்தது.
ஆஸ்ட்ரோ ஏற்பாட்டில் தற்காப்பு திரைப்படத்தின் சிறப்புத் திரைக்காட்சி நேற்று இரவு 9.00 மணிக்கு கேஎல்சிசியில் உள்ள டிஜிவி திரையரங்கில் நடந்தேறியது.
இந்த சிறப்புத் திரைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக காவல் துறையின் முன்னாள் துணை ஆணையர் டத்தோ பரமசிவம் கலந்து கொண்டு படத் திரையீட்டுக்கு முன்பாக உரையாற்றினார்.
காவல் துறையினரின் தியாகங்களையும், உழைப்பையும், நாடும், மக்களும் நலமாக இருக்க அவர்கள் வழங்கும் அர்ப்பண உணர்வையும் எடுத்துக் காட்டும் படமாக ‘தற்காப்பு’ திகழ்கின்றது என டத்தோ பரமசிவம் தனது உரையில் குறிப்பிட்டார்.
‘தற்காப்பு’ திரைப்படத்தின் அறிமுக விழா கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்தேறியது. அதில் படத்தின் நடிகர்களான சக்திவேல் வாசு, சமுத்திரகனி மற்றும் இயக்குநர் ஆர்.பி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘தற்காப்பு’ படத்தின் திரைவிமர்சனம் இன்று செல்லியலில் இடம் பெறும்.