பத்து காஜா – உலகையே கலக்கி வரும் போக்கிமான் இணையவழி விளையாட்டை தற்காப்பு அமைச்சு தனது வளாகங்களில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அறிவித்துள்ளார்.
இந்த விளையாட்டு, ஜிபிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற வரைபடங்களைக் காட்டும் இணைய இணைப்பைப் பயன்படுத்துவதால், நாட்டின் முக்கிய பாதுகாப்பு தளங்களின் தகவல்களையும், வரைபடங்களையும் காட்டக் கூடும் என்பதாலும், அதன் காரணமாக தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தாலும் இந்தத் தடை விதிக்கப்படுவதாக ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
இராணுவ, கடற்படை, விமானப் படைத் தளங்களைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் தங்களின் வளாகங்களில் இந்த விளையாட்டைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பார்கள் என்றும் ஹிஷாமுடின் மேலும் தெரிவித்துள்ளார்.