Home நாடு அமைச்சரவை : 4 மூத்த அமைச்சர்கள் யார்? பின்னணி என்ன?

அமைச்சரவை : 4 மூத்த அமைச்சர்கள் யார்? பின்னணி என்ன?

1077
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 31 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் கொண்டது பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை.

இவர்களில் யாரையும் துணைப் பிரதமராக நியமிக்காத இஸ்மாயில் சாப்ரி, மொகிதின் யாசின் பாணியைப் போலவே, 4 மூத்த அமைச்சர்களை நியமித்துள்ளார்.

இஸ்மாயில் சாப்ரியுடன் சேர்த்து மொத்தம் 5 பேர் கொண்ட இந்தக் குழு மூத்த அமைச்சர்களாக செயல்படுவர்.

#TamilSchoolmychoice

அந்த 4 மூத்த அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகளையும், அவர்களின் சில பின்னணிகளையும் காண்போம்.

டத்தோஶ்ரீ அஸ்மின் அலி

நான்கு மூத்த அமைச்சர்களில் பெர்சாத்து கட்சியின் சார்பில் இடம் பெற்றிருப்பவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி.

இவர் மீண்டும் அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை.

காரணம், அந்த அமைச்சுப் பொறுப்பில் இருந்தபோது அஸ்மின் அலி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கும் பொறுப்பு அவர் வசம் இருந்ததால், பல தொழில்கள் இயங்க அவர் அனுமதி அளித்ததால்தான் கொவிட் தொற்றுகள் பெருகின என்ற கருத்தும் நிலவியது.

இருந்தும் மீண்டும் அவரே அந்த அமைச்சுப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது கண்டனங்களை ஆங்காங்கே தோற்றுவித்துள்ளது. இதற்கு அரசியல் நெருக்கடிதான் காரணமாகக் கூறப்படுகிறது.

பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறிய 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்திருக்கிறார் என்பதுதான் அந்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் இருக்கும் காரணம்!

ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் தற்காப்பு அமைச்சராக நியமனம்

இஸ்மாயில் சாப்ரி செய்திருக்கும் மற்றொரு மாற்றம் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்னை தற்காப்பு அமைச்சராக நியமித்திருப்பது. அம்னோவின் சார்பில் மற்றொரு மூத்த அமைச்சராக ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் செயல்படுவார்.

ஏற்கனவே, தற்காப்பு அமைச்சராக இருந்த அனுபவமும் ஹிஷாமுடினுக்கு உண்டு.

டத்தோஸ்ரீ பாடில்லா ஹாஜி யூசோப் மீண்டும் பொதுப் பணி அமைச்சராக நியமனம்

சபா, சரவாக் மாநிலங்களைப் பிரதிநிதிக்கும் நோக்கில், நியமிக்கப்பட்டிருக்கும் மற்றொரு மூத்த அமைச்சர் பாடில்லா ஹாஜி யூசோப் (Fadillah Hj. Yusof). இவர் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சரவாக் மாநிலத்தின் ஜிபிஎஸ் கூட்டணி சார்பில் பாடில்லா யூசோப் நியமிக்கப்பட்டிருக்கிறார். மொகிதின் யாசினின் அமைச்சரவையிலும் இவர் இதே பொறுப்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி துணைப் பிரதமர் பதவிக்குக் குறி வைத்திருந்தது. ஆனால் இப்போதைக்குக் கிடைத்திருப்பது என்னவோ மூத்த அமைச்சர் பொறுப்புதான்!

முகமட் ராட்சி முகமட் ஜிடின் மீண்டும் கல்வி அமைச்சராகவும் மூத்த அமைச்சராகவும் நியமனம்

மீண்டும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முகமட் ராட்சி முகமட் ஜிடின். இவர் மீதும் கடந்த அமைச்சரவையில் பல அதிருப்திகள் எழுந்தன.

கல்வி விவகாரங்களையும், பள்ளிகள் திறப்பு தொடர்பான விவகாரங்களிலும் இவர் திருப்திகரமான முறையில் செயல்படவில்லை என்ற குறைகூறல்கள் நிறைய இருந்தன.

இருப்பினும் மீண்டும் அதே கல்வி அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அத்துடன் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராவார்.

செனட்டராக நியமிக்கப்பட்டு அதன் மூலம் அமைச்சரானவர் முகமட் ராட்சி.

4 மூத்த அமைச்சர்கள் என்றாலும் அனைத்துப் பார்வைகளும் கைரி ஜமாலுடின் மீது…

நான்கு மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அனைவரின் பார்வையும் ஒட்டுமொத்தமாக திரும்பியிருப்பது, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் கைரி ஜமாலுடின் மீதுதான்.

அவரே இனி கொவிட் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் அமைச்சராகவும் தொடர்வார் என இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருப்பதும் கைரி மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal