புத்ராஜெயா – 2016ஆம் ஆண்டு நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஒரு சிறந்த சுகாதாரச் சேவையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சுகாதார அமைச்சு பல்வேறு புதிய திட்டங்களை அமலாக்கம் செய்யவிருக்கின்றது என்றும் குறிப்பாக, நேரடியாக மக்களின் தேவைகளை அறிந்தும் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவிலான திட்டங்களை அறிமுகம் செய்யவிருக்கின்றது என்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
4 அம்சத் திட்டங்கள்
குறிப்பாக, நாட்டிலுள்ள சுகாதார சேவை வழங்குவதில் உருமாற்றத்தைக் கொண்டு வரும் அடிப்படையில் 4 முக்கிய அம்சங்கள் இவ்வாண்டில் அமல்படுத்தப்படும் என மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.
அந்த நான்கு அம்சங்கள் பின்வருமாறு:-
- குறைந்த அளவில் சுகாதார சேவையை அணுகக்கூடிய பொதுமக்களின் ஆதரவினை அதிகப்படுத்துதல்,
- சிறந்த சுகாதாரத்தை வெளிக்கொணரும் வகையில் சுகாதார அமைப்பு முறைகளை மேம்படுத்துதல்,
- சுகாதார தரத்தைத் தொடர்ந்து விரிவுப்படுத்துதல்
- சுகாதாரம் தொடர்பான அரசாங்கம், தனியார், அரசு சாரா இயக்கங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துதல்
இந்நான்கு அம்சங்களும் 11அவது மலேசிய திட்டத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட அம்சங்களாகும். நாட்டில் முதல் கட்ட சுகாதார சேவையை (Primary Healthcare) தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கிலும் பல திட்டங்கள் அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்படுகின்றது.
இனிப்பு நீர், இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு வசதிகள்
அவ்வகையில், அரசாங்க சுகாதார மையங்களில் இருக்கக்கூடிய வசதிகளை அதிகரித்து, இனிப்பு நீர், இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு ஆளாகியிருக்கும் மக்கள் தொடர்ச்சியான முறையில் சிகிச்சை பெறக்கூடிய திட்டத்தையும் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன் மூலமாக, அவர்களுக்கு வழங்கக்கூடிய சிகிச்சை முறையில் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் காணக்கூடிய அளவில் சுகாதார அமைச்சு செயல்பட்டு வருகின்றது. இனி வரும் காலங்களில் பொது மக்கள் அரசாங்கத்தின் ஒரே மலேசியா சுகாதார மையத்திலும் தங்களின் உடல் நிலை குறித்த தகவல் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
மேலும், நாட்டில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான மருத்துவமனைகளில் நிபுணத்துவ சேவைகளை வழங்குவதற்குரிய சிறப்புத் திட்டங்களையும் தாங்கள் வகுத்துள்ளதாகவும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதன்வழி, தற்பொழுது நிபுணத்துவ மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் இத்திட்டத்தை அமல்படுத்தி நாட்டில் நிபுணத்துவ மருத்துவ சேவைகளை அதிகரிக்கச் செய்யவிருப்பதாகவும் சுப்ரா தெரிவித்துள்ளார்.
அதுபோலவே, நாட்டில் மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய மருத்துவ அவசர சிகிச்சை வாகனங்களுக்கான வசதிகளில் உள்ள குறைப்பாடுகளை கண்டறிந்து அதனைச் சரிசெய்வதற்கான பணிகளையும் அமைச்சு மேற்கொள்ளும். அவசர மருத்துவ வாகனத்தின் தேவையையும் தரத்தையும் எந்த அடிப்படையில் மேம்படுத்த முடியுமோ அந்த அளவில் மேம்படுத்தி, பொதுமக்களுக்கு உடனடியாக இச்சேவைக்கான வசதிகள் போய் சேருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். மக்களின் உடனடி தேவைகளை அறிந்து சேவையாற்றக்கூடிய அளவில் இதற்கான உருமாற்றத் திட்டங்கள் வரையறுக்கப்படும்.
“கோஸ்பேன்” திட்டம்
தொடர்ந்து “கோஸ்பேன்” என்ற திட்டத்தை மேம்படுத்துவதில் சுகாதாரம் தொடர்பான அரசாங்கம், தனியார், அரசு சாரா இயக்கங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்படும். இந்தக் “கோஸ்பேன்” திட்டத்தின் வழி சுகாதாரத் தரத்தை மேம்படுத்தி மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த முடியும்.
அடுத்து வரக்கூடிய 5 ஆண்டுகளில், நவீனப்படுத்தப்பட்ட நிருவாக முறையை அமல்படுத்தி தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கப்படும். இதன்வழி முழுமையாக கணினியில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் (Computerize Integrated System) மூலமாக சுகாதார சேவைகள் வழங்கக்கூடிய சூழ்நிலையை அமைச்சு உருவாக்கும்.