குவாந்தான் – சட்டவிரோதமாக பாக்சைட் தோண்டுவதற்கு லஞ்சம் வாகியதாக சந்தேகிக்கப்படும் குவாந்தான் நிலம் மற்றும் தாது வளத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
அவர்களுள் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளும் அடக்கம் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து எம்ஏசிசி விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ மொகமட் அசாம் பாகி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக பாக்சைட் தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்த அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவத்தில் 100,000 -த்திற்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 30 வயது முதல் 38 வயதிற்குட்பட்டவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் எம்ஏசிசி சட்டம் 2009, சட்டப்பிரிவு 17(a)-வின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று மொகமட் அசான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பாக்சைட்களை சட்டவிரோதமாகத் தோண்டுபவர்களிடம் சேர்ப்பதில் சில ஆவணங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதையும் எம்ஏசிசி கண்டறிந்துள்ளது.
அந்த ஆவணங்களுக்கு 150 முதல் 200 ரிங்கிட் வரையில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.