புது டெல்லி – இந்தியாவில் கடந்த 2012-ம் ஆண்டு, மன்மோகன் சிங் ஆட்சியின் போது இராணுவப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற, முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங் முயற்சித்ததாக வெளியான செய்தியால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இராணுவப் புரட்சி செய்ய வி.கே.சிங் ஏன் முயற்சித்தார் என தற்போது பரவலாக கேள்வி எழுந்துள்ளது.
நேற்று முன்தினம், டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, முன்னாள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி(படம்), கடந்த 2012ம் ஆண்டு டெல்லியை நோக்கி இராணுவத்தின் 3 படைப்பிரிவுகள் நகர்ந்ததாக சொல்லப்பட்டது உண்மை தான் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது, இராணுவப் புரட்சி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எனது அறிவுக்கு எட்டியவரை அந்த செய்தி தொடர்பான சம்பவம் உண்மை என்றுதான் தெரிகிறது. அப்போது நான் பாதுகாப்புத்துறையின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டே ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்திக் குறிப்பில், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நள்ளிரவு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் டெல்லியை நோக்கி இராணுவத்தின் 3 படைப்பிரிவுகள் நகர்ந்ததாக குறிப்பிட்டு இருந்தது. அதன் பிறகு என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி கைவிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் வி.கே. சிங்(படம்) அளித்த பேட்டியில், “டெல்லியை நோக்கி இராணுவப் படைப் பிரிவுகள் சென்றதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இராணுவத்தின் மீதும் சேற்றை வாரி இறைக்கும் முயற்சியாகத் தான் இதனை நான் பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.