கோலாலம்பூர் – பகாங் பாக்சைட் சுரங்கப் பணிகளில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தயக்கம் காட்டாது என அதன் இயக்குநர் அசாம் பாகி தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைக்கு அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில், முக்கியப் புள்ளிகளின் பங்களிப்பு இருந்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அசாம், “எங்கள் விசாரணை தொடங்கப்பட்ட போது நானும் அதைக் கேள்விப் பட்டேன், ஆனால் இப்போதைக்கு அதை என்னுள் மட்டும் வைத்துக் கொள்கிறேன். ஆனால் பெரிய மீன்களுக்கு வலை விரிப்பதில் எம்ஏசிசி-க்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் விவகாரத்தில் இதுவரை பகாங் நிலம் மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் மேலும் 3 தனிநபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.