புத்ரா ஜெயா – இந்திரா காந்தி விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக்குப் பிந்திய கூட்டத்தின்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, கேட்கப்பட்ட கேள்வியின்போது பதிலளித்தபோதே டாக்டர் சுப்ரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திரா காந்தி விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்குப் பின்னர் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த டாக்டர் சுப்ரமணியம் “2009ஆம் ஆண்டிலிருந்து நீடித்து வரும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தாங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், சில சவால்களையும் நாங்கள் சந்தித்தோம். அந்த அடிப்படையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம்” என்றும் சுப்ரமணியம் கூறினார்.
“பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கின்றோம். இந்தப் பிரச்சனைக்கு முறையான தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அது. இந்தப் பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்துடன் நாங்கள் கலந்தாலோசிக்க உள்ளோம். இதற்கான தீர்வு என்பது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் ஒரு சில பிரிவுகளைத் திருத்துவதன் மூலம் மூலமே சாத்தியம் என்பதால், அதற்கான சட்டத்திருத்தங்கள் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது சமர்ப்பிக்கப்படும். எனவே, சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்கும்போது இந்தப் பிரச்சனைக்கான தீர்வும் காணப்படும். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.