கோலாலம்பூர் – பாதுகாப்பு குற்றங்கள் சட்டம் 2012 (சொஸ்மா) வின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், தங்களது தண்டனைக் காலத்தில் மிகவும் கொடுமைகளை அனுபவிப்பதாக அவர்களே கைப்பட எழுதியுள்ள கடிதத்தை, அரசு சாரா இயக்கமான சுவாராம் (Suaram) இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கைதி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், விசாரணை அதிகாரி தன்னை அவரது காலை முத்தமிடச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அவர்கள் முன்னிலையில் சுயஇன்பம் (masturbate) செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆபாச காணொளிகளை பார்க்கும் படியும், தனது மனைவியை விவாகரத்து செய்யும் படியும் வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற கைதிகள் அனுபவித்த துன்பங்களைக் காட்டிலும் கூடுதலாக தான் இந்தத் துன்பங்களை அனுபவித்ததாக அக்கைதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மனைவியிடமிருந்து குழந்தையைப் பறித்து, அவரை மலேசியாவில் இருந்து கம்போடியாவிற்கு நாடு கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவோம் என்று விசாரணை அதிகாரிகள் மிரட்டியதாகவும் அக்கைதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 7 கைதிகளிடமிருந்து பெறப்பட்ட அக்கடிதங்களில், 6 கடிதங்களை சுவாராம் இன்று வெளியிட்டது.
7 -வது கைதியின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது கடிதத்தை வெளியிடவில்லை என்றும் சுவாராம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 21 பக்கங்கள் கொண்ட அந்த 6 கடிதத்தின் நகல்கள், இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், செய்தியாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.