கோலாலம்பூர் – நாட்டிலுள்ள அனைத்து பொதுமருத்துவமனைகளிலும் குளிரூட்டும் வசதி எல்லா நேரங்களிலும் செயல்பட்டு, மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கின்றதா? என்பதை சுகாதாரத்துறை மறு உறுதி செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் பொதுமருத்துவமனை இயக்குநர்கள் அனைவரும் தங்களது மருத்துவமனைகளில் குளிர்சாதனப் பெட்டிகளின் செயல்பாடு குறித்தும், குளிரூட்டும் வசதி குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், எதிர்பாராதவிதமாக ஏற்படும் திடீர் பழுதைத் தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மஇகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரா, “சில மருத்துவமனைகள் மிகவும் பழையது, அவற்றில் செயல்படும் குளிர்சாதன வசதியும் மிகவும் பழையது, அதனால் அவை பழுதடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குவாந்தான், செலாயாங், செகாமட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமருத்துவமனைகளில் அண்மையில், குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைந்ததால், பல நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதனைத் தொடர்ந்து எழுந்த புகார்களை அடுத்து சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை செய்துள்ளது.