Home Featured நாடு அரசியல் பார்வை: முக்ரிஸ் நீக்கம்! – பொதுத் தேர்தலுக்கு நஜிப் விடுக்கும் அறிகுறியா?

அரசியல் பார்வை: முக்ரிஸ் நீக்கம்! – பொதுத் தேர்தலுக்கு நஜிப் விடுக்கும் அறிகுறியா?

626
0
SHARE
Ad

mukriz-najib-mahathirகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகனும், கெடா மந்திரி பெசாருமான டத்தோ முக்ரிஸ் மகாதீரை நீக்க வேண்டுமென கெடா அம்னோ போர்க்கொடி தூக்கியிருப்பதற்குப் பின்னணியில் இருப்பவர் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப்தான் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

தன்னை நோக்கி விடாமல் துரத்தி வரும் மகாதீரை எதிர்த்து நேரடியாக மோதுவதை இதுவரை தவிர்த்து வந்த நஜிப், இப்போது முதல் கட்டமாக அவரது மகன் முக்ரிஸ் மீது கைவைத்திருப்பதன் மூலம் எதற்கும் துணிந்து விட்டேன் நான் என்பது போன்ற மறைமுக செய்தியை விடுத்திருக்கின்றார்.

Mukhriz-Mahathir-Feature-2அம்னோ அமைப்பில், மாநிலத்தின் மந்திரி பெசார் பதவி என்பது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகும். வழக்கமாக பிரதமருக்கு நெருக்கமான – பிரதமரின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற – ஒருவர்தான் எப்போதும் மந்திரி பெசாராக இருப்பார்.

#TamilSchoolmychoice

ஆனால், தன்னை எதிர்க்கும் மகாதீரின் மகனை வைத்துக் கொண்டு கெடா மாநிலஅரசியலில் காய்களை நகர்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டுள்ள நஜிப், அதற்காகத்தான் முக்ரிசை நீக்கும் படலத்தை, கெடா அம்னோவினரைக் கொண்டே தொடக்கி வைத்திருக்கின்றார்.

பொதுத்தேர்தலுக்கு அறிகுறியா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பொதுத் தேர்தலுக்கு அம்னோவை ஆயத்தப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவும் முக்ரிசின் நீக்கம் பார்க்கப்படுகின்றது.

Najib-Semenyih-1MDBகாரணம், பொதுத் தேர்தலுக்கு முன்பாக அம்னோ கட்சித் தேர்தல் நடைபெறாது என்ற நிலையில், அம்னோவில் தன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக முக்ரிசை நீக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ நஜிப்புக்கு இப்போதைக்கு இல்லை.

பொதுத் தேர்தல் காலங்களில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது முதல், பிரச்சாரத்தை வகுப்பது வரை, தேர்தல் நிதி விநியோகம் என பல கோணங்களிலும் ஒரு மாநிலத்தின் மந்திரி பெசார் மிகவும் பலம் வாய்ந்தவராகத் திகழ்வார்.

எனவே, முக்ரிசை வைத்துக் கொண்டு பொதுத் தேர்தலைச் சந்திக்கிற சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் நஜிப் இப்போதே அவரை மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்குகின்றார் எனக் கருதப்படுகின்றது.

பொதுத் தேர்தலை நோக்கி நாடும், நாட்களும் விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அம்னோ வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ள கேள்வி –

நஜிப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா அல்லது தானே முன்னின்று விடாப்பிடியாக, தேசிய முன்னணிக்குத் தலைமையேற்று பொதுத் தேர்தலை சந்திப்பாரா என்பதுதான்!

அம்னோவே முடிவு செய்யும்

UMNO_logo_baru1நஜிப், தனது தலைமையில் தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திக்கும் என முடிவெடுத்தால், அதனை எதிர்த்து மஇகா, மசீச போன்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளோ, சபா சரவாக் கட்சிகளோ எதிர் நடவடிக்கைகளில் இறங்கப் போவதில்லை.

ஆனால் அம்னோ அதற்கு ஒப்புக் கொள்ளுமா?

நஜிப்பை நம்பி அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்கினால் அம்னோ கரையேற முடியாது – கப்பல் கவிழ்ந்து விடும் – என்பதுதான் மகாதீர் போன்ற தலைவர்கள் தொடர்ந்து விடுத்து வரும் எச்சரிக்கையாகும்.

ஆனால், கட்டம் கட்டமாக காயை நகர்த்தி வரும் நஜிப் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டார். பொதுத் தேர்தலை தானே நேரடியாக சந்திப்பதா அல்லது மக்கள் மத்தியில் பெருகிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு அலைகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொள்வதா என்பதுதான் அந்த இறுதிக்கட்டம்.

ஆனால், நஜிப்பின் நடவடிக்கைகளைப் பார்த்தால், குறிப்பாக முக்ரிசை நீக்கும் அவரது அடுத்த கட்ட அரசியல் முயற்சிகளைப் பார்த்தால், வருவது வரட்டும் – நானே அம்னோவுக்கும், தேசிய முன்னணிக்கும் தலைமையேற்றுத் தேர்தலைச் சந்திக்கின்றேன் என அவர் முடிவு செய்து விட்டதுபோல் தெரிகின்றது.

அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாகக் கடந்து விட்டால், அந்த வெற்றியின் உற்சாகத்தில், நஜிப் பொதுத் தேர்தலை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பொதுத் தேர்தலுக்கு இதுவே சிறந்த தருணமா?

hadi awang 300-200இன்னொரு கோணத்தில் பார்த்தால், பொதுத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு நஜிப்பிற்குக் கிடைத்திருக்கும் சிறந்த தருணம் இந்த ஆண்டுதான் என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் விலகி நிற்பது – பாஸ் தலைவர் ஹாடி அவாங்குடன் நஜிப் காட்டும் நெருக்கம் – அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் இருக்கும் சுமுகமான சூழல் – அன்வார் இப்ராகிம் இன்னும் சிறைக்குள் இருப்பது – இப்படி எல்லா வகையிலும் சாதகங்களைக் கொண்டுள்ள ஒரு சூழ்நிலையில் பொதுத் தேர்தலை அறிவித்தால்,

தேசிய முன்னணி எளிதாக அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்கும் பலத்தைப் பெற்று விடும்.

சில தொகுதிகள் கூடலாம், குறையலாம்! ஏன் சில மாநிலங்களைக் கூட தேசிய முன்னணி இழக்கலாம்! ஆனால், பாஸ் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இல்லாத காரணத்தால், புதிதாக சேர்ந்துள்ள அமனா கட்சியின் துணையோடு, எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது என்பது முடியாத காரியம்தான்.

ஹாடி அவாங் இருக்கும் போதே….

PAS-Logoஉடல் நலம் குன்றியிருக்கும் ஹாஜி ஹாடி அவாங்கிற்குப் பிறகு அமையப் போகும் பாஸ் தலைமைத்துவம் இப்போது இருப்பதைப் போன்று நஜிப்புடனும், அம்னோவுடனும் இணக்கப் போக்கைக் கொண்டிருக்குமா அல்லது மீண்டும் பக்காத்தான் பக்கம் சாயுமா என்பதும் இப்போதைக்கு விடை சொல்ல முடியாத மற்றொரு கேள்வி.

ஆக, ஹாடி அவாங் தலைமைத்துவம் இருக்கும்போதே, பொதுத் தேர்தலை அறிவிப்பதுதான் நஜிப்புக்கு சாதகமாக இருக்கும்.

அவ்வாறு, அம்னோ தலைமையில் தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றி ஆட்சி அமைத்து விட்டால், அதன் பின்னர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நஜிப்பை யாராலும் அசைக்க முடியாது, மகாதீர் உட்பட!

1எம்டிபி பிரச்சனைகளும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சிதைந்து சிதறி விடும்.

ஆனால், அம்னோ தலைவர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா அல்லது நஜிப்புக்கு எதிர்ப்புக் கொடி காட்டுவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.

அந்த வகையில் முக்ரிசின் நீக்கம் என்பதை, நஜிப்பின் பொதுத் தேர்தல் வியூகங்கள் – நோக்கங்கள் நிறைவேற வழிவகுக்கப் போகும் முதல்கட்ட காய் நகர்த்தலாகப் பார்க்கலாம்!

-இரா.முத்தரசன்