ஐதராபாத் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலா விவகாரம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சாதிய பாகுபாடு காரணமாகத்தான் மாணவர் தற்கொலை நிகழ்ந்து இருப்பதாகவும், அதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் சாதிய பாகுபாடு புகுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் அந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, ஐதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 தலித் ஆசிரியர்கள் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களின் ஜோடிக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ள மனமில்லை. அதனால் நாங்கள் (தலித் ஆசிரியர்கள்) எங்கள் பதவிகளைத் துறக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.