ஐதராபாத் – கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்சாப்பில் காணொளி ஒன்று பலராலும் பகிரப்பட்டு வந்தது. அக்காணொளியில் இரயில் ஒன்றின் கழிவறைக்குள் சீருடை அணிந்த காபி, டீ விற்பனையாளர்கள், கையில் கேன்களுடன் போவதும், வருவதுமாகப் பதிவாகியிருந்தது.
பின்னர் அக்காணொளியின் முடிவில் தான் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது புரிகின்றது. அதாவது இரயிலின் கழிவறையில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து அதனை கேன்களில் சூடாக இருக்கும் காபி, டீயுடன் கலக்கின்றனர்.
இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியடைந்ததோடு, அறுவெறுப்பும் அடைந்தனர். இரயிலில் விற்பனை செய்யப்படும் காபி, டீயின் சுகாதாரம் இக்காணொளியின் மூலம் கேள்விக் குறியானது.
இந்நிலையில், தெற்கு மத்திய இரயில்வே நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இச்சம்பவம் குறித்த நடைபெற்ற விசாரணையில், அது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயிலில் நடந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு தெற்கு இரயில்வே 1 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதோடு, அவர் மீது தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும்” எனத் அறிவித்திருக்கிறது.