சென்னை – விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் அமைந்துள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவிகளின் இறப்பில் பல சந்தேகங்களும், குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.
அவர்களின் இறப்பு தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்று கூறி அவர்களின் பெற்றோர் பிரேதப் பரிசோதனை நடத்த ஒப்புக் கொள்ள மறுத்தனர்.சென்னையில் ஓய்வுபெற்ற நீதி பதிகள் முன்னிலையில் காணொளிப் பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சரண்யா, பிரியங்காவின் பெற்றோர் பிரேதப் பரிசோதனை நடத்த ஒப்புக் கொண்டனர். அதன்படி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனினும், மோனிஷாவின் பெற்றோர் பிரேத பரிசோதனை நடத்த ஒப்புதல் அளிக்கவில்லை. என்றாலும் ஆட்சியர் உத்தரவின்படி கடந்த ஞாயிற்றுகிழமை இரவு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மோனிஷாவின் தந்தை தமிழரசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு பிரேத பரிசோதனை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், இறந்த மாணவியின் உடலை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக் கம் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவி மோனிஷாவின் உடலுக்கு ஆயுதமேந்திய காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.