புது டெல்லி – ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கட்டண முன்பதிவில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘ஃபேர்லாக்’ (Fare Lock) என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
விமான நிறுவனங்களின் இணைய தளங்களில் அவ்வபோது சலுகைகளும், குறைந்த விலை கட்டண அறிவிப்புகளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளியாகும். அப்படி வெளியாகும் சலுகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள நினைப்போம். இருந்தாலும் நாம் குறிப்பிட்ட அந்த காலத்திற்கு பயணிப்போமா? இல்லையா? என்ற குழப்பம் நேரிடும். குழப்பம் தீர்ந்து அந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பதற்குள் பலர் முன்பதிவு செய்துவிடுவர்.
இதனை தவிர்ப்பதற்காகவே இந்த ‘ஃபேர்லாக்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிறிய தொகையை செலுத்தி விட்டு, நமக்கு தேவையான சீட்டுகளை (Tickets) நாம் தக்க வைத்துக் கொள்ளாலாம். குறிப்பிட்ட அந்த பதிவுகளை, 72 மணி நேரத்திற்குள் மீதித் தொகையை செலுத்தி உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அவை காலாவதியாகி விடும்.
இந்த ‘ஃபேர்லாக்’ வசதியைப் பயன்படுத்த, உள்நாட்டு போக்குவரத்திற்கான கட்டணம் என்றால் 350 ரூபாயும், வெளிநாட்டு போக்குவரத்திற்கான கட்டணம் என்றால் 700 ரூபாயும் முன் கட்டணமாக செலுத்த வேண்டும்.