லாஸ் ஏஞ்சல்ஸ் – நடிகர் கமல்ஹாசனின் தொழில்நுட்ப ஆர்வம் பற்றி அனைவருக்கும் தெரியும். செல்பேசியாகட்டும், கேமராவாகட்டும் புதிதாக ஒரு கருவி அறிமுகமானால் உடனடியாக அது கமல்ஹாசன் வீட்டுக் கதவைத் தட்டிவிடும்.
அந்த அளவிற்கு அவர் புதிய கருவிகளை கையாள்வதிலும்,அதனைப் பற்றிய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வதிலும் நாட்டமுடையவர்.
மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனத்திற்கு கமல் வருகை புரிந்த போது, அவரிடம் ஓபி வேன் தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளிக்க முயற்சி செய்த ஒருவர் பட்டபாடு பற்றி, அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவு துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி அவர்களை செல்லியல் நேர்காணல் செய்த போது கலகலப்பாகக் கூறினார்.
இப்படியாக, ஒரு நடிகராக மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பேரார்வம் கொண்டவரான கமல்ஹாசன் அண்மையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.
ஆனால், அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை அவர், அங்குள்ள பல முக்கிய நிறுவனங்களைப் பார்வையிட்டு வருகின்றார்.
நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்ததாகவும் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்குள்ள ஊழியர்களுடன், பல தம்படங்களை எடுத்துக் கொண்ட கமல், “கூகுளை கூகுள் செய்து & கூகுளர்களை நிர்வகித்தபோது” எனக் குறிப்பிட்டுள்ளார்.