லாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 88வது ஆஸ்கார் விருதுகளுக்கான முதல் பட்டியலை பாகம் -1 என்ற இணைப்பில் காணலாம். அந்த விருதுகளின் பட்டியல் தொடர்கின்றது…
சிறந்த பார்வைக்குரிய காட்சிகள் (Best Visual effects)
திரையரங்கில் பார்க்கும்போது உங்கள் பார்வைக்கு சிறந்த முறையில் படைக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட படத்திற்கு பெஸ்ட் விஷூவல் எஃபெக்ட்ஸ் என்ற பெயரில் இந்த விருது வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான இந்த விருதை “எக்ஸ் மேஷினா” (Ex-Machina) என்ற படம் பெற்றுள்ளது. இதற்கான விருதை அண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட், பால் நோரிஸ், மார்க் அர்டிங்டன் மற்றும் சாரா பென்னட் ஆகிய நால்வரும் இணைந்து பெறுகின்றனர்.
சிறந்த கார்ட்டூன் குறும்படம் (Best Animated Short Film)
மிருகங்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்படும் சிறந்த கார்ட்டூன் குறும்படமாக “பேர் ஸ்டோரி” (Bear Story) என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருதை கேப்ரியல் ஓசாரியோ மற்றும் பாட்டோ எஸ்காலா ஆகிய இருவரும் இணைந்து பெறுகின்றனர்.
சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor)
சிறந்த துணை நடிகருக்கான விருதை “பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்” (Bridge of Spies) என்ற படத்தில் நடித்ததற்காக மார்க் ரைலன்ஸ் என்ற நடிகருக்குக் கிடைத்துள்ளது.
“கிரிட்” (The Creed) என்ற படத்தில் நடித்ததற்காக இதே விருதுக்கு முன்மொழியப்பட்ட சில்வர்ஸ்டன் ஸ்டால்லோனுக்கு இந்த விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை.
(மேலும் விருதுகள் பட்டியல் தொடரும்)