சென்னை – சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலான விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் கடமையை பொதுமக்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான பிரச்சாரப் படங்களில் நடிக்க சமூகத்தில் பிரபலமாக விளங்கும் பல முக்கிய பிரமுகர்களை தேர்தல் ஆணையம் அணுகி வருகிறது.
அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தை தேர்தல் ஆணையம் தற்போது அணுகியுள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுதேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படக்காட்சிகள் வெளிவரவுள்ளன.
நடிகை நயன்தாரா நடித்துள்ள விழிப்புணர்வு படம் விரைவில் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த்திடமும் விழிப்புணர்வு படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் இலவசமாக நடித்தார். விழிப்புணர்வு விளம்பர வீடியோ படப்பிடிப்புக்காக ரூ.10 லட்சம், சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக ரூ.10 லட்சம், எப்.எம். ரேடியோ மூலம் ஒலிபரப்புவதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளோம்.
இந்தத் தேர்தலுக்கான அனைத்து ஓட்டு எந்திரங்களும் வந்துவிட்டன. 28 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்காம் மூலமாகவும், 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வீடியோ படப்பிடிப்பு மூலமாகவும் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும். மொத்தமுள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளில் பாதியளவு வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக்குள் வந்துவிடும் என அவர் கூறினார்.