சென்னை – காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவுப்படி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக, விஜயதாரணி நியமிக்கப்படுவதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், மகளிர் காங்கிரஸ் தமிழகப் பிரிவு தலைவியாக இருந்து வந்த விஜயதாரணி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
விஜயதாரணிக்கு பதிலாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, அதிமுகவில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்த சோனியாகாந்தி, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். தன்னை ஒரு போராளி என்று சோனியாகாந்தி கூறியதாகவும் விஜயதாரணி தெரிவித்திருந்தார்.