இராமநாதபுரம் – காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகளுக்கு கைது ஆணை பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சேரனின் ‘சினிமா 2 ஹோம்’ Cinema2Home) என்ற திட்டத்தில், இராமநாதபுரம் பழனியப்பன் என்பவர் சேர்ந்திருந்தார்.
அதற்கென 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சேரனிடம் செலுத்தியிருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவில் ‘சினிமா 2 ஹோம்’ (Cinema 2 Home) லாபம் தராத நிலையில், பழனியப்பன் தான் செலுத்திய தொகையை திரும்ப கொடுக்கும்படி சேரனிடம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து சேரன் பழனியப்பனுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியான பழனியப்பன் சேரனிடம் முறையிட்டும் பலனில்லாத நிலையில், நீதிமன்றம் சென்றுள்ளார். இது தொடர்பான வழக்கு இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, சேரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவில் மார்ச் 10-ஆம் தேதி சேரன் ஆஜராக வேண்டும் குறிப்பிட்டு இருந்தது.
நீதிமன்றம் கூறியபடி சேரன் அன்று நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, சேரன் மற்றும் அவரின் மகள் நிவேதா பிரியதர்சினிக்கு கைது ஆணை பிறப்பித்து, வழக்கை வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.