மும்பை – மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில், சல்மான் கான் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, ஜோத்பூர் முதன்மை நீதிமன்றத்தில் சல்மான் கான் இன்று ஆஜராகியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் கடந்த 1998–ஆம் ஆண்டு சினிமா படப்பிடிப்புக்காக பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் சென்றிருந்தார். அப்போது அவர் காட்டுக்கு சென்று 2 மான்களை வேட்டையாடிதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து நடிகர் சல்மான்கான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நடிகர் சல்மான்கான் உரிமம் பெறாத துப்பாக்கி மூலம் மான் வேட்டை நடத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சல்மான்கான் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜோத்பூர் மாவட்ட முதன்மை ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சாட்சிகள் விசாரணை உள்பட அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் சல்மான்கான் தரப்பில் கடந்த 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘5 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி தல்பத்சிங், நடிகர் சல்மான்கானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் நடிகர் சல்மான் கான் இன்று 10–ஆம் தேதி (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். அதன்படி, ஜோத்பூர் முதன்மை நீதிமன்றத்தில் சல்மான் கான் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.