புதுடெல்லி – முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், மற்றும் அமித்தவ ராய் அமர்வு முன் கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டு வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக வழக்கறிஞர் தவே வாதிம் செய்தார்.
வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது என்றும், இந்த வழக்கில் பெங்களூர் நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதா சொத்தை துல்லியமாக மதிப்பீட்டு தீர்ப்பளித்துள்ளார் என்றும் தவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் கர்நாடக ருயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குறைவாக மதிப்பிட்டதால் ஜெயலலிதா விடுதலை பெற்றார் என்றும் தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி குமாரசாமி தவறாக விசாரித்துள்ளார் என்று கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.
முதலமைச்சர் மீதான வழக்கை மிகச் சாதாரணமாக குமாரசாமி விசாரித்துள்ளார் என்றும், ஜெயலலிதா சொத்தினை நீதிபதி குமாரசாமி குறைத்து மதிப்பிட்டதை ஏற்க கூடாது என்றும் தெரிவித்தார்.