சென்னை – கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி, நெல்லை மாவட்டம் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சமகவின் தலைவர் சரத்குமாரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆட்சி முடியும் தருவாயில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து சமக விலகியது.
சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட சில நிர்வாகிகளை கட்சியிலிருந்து விலகினர். கரு.நாகராஜன் பி.ஜே.பி.யில் சேர்ந்தார்.
எர்ணாவூர் நாராயணன், ‘சமத்துவ மக்கள் கழகம்’ (சமக) என்ற புதிய கட்சியை சென்னையில் இன்று தொடங்கியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் சமத்துவ மக்கள் கழகம் இடம்பெறும் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த புதிய கட்சி தொடக்க விழாவில், கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறுகையில், “காமராஜரின் கனவை நினைவாக்கிட சமத்துவ மக்கள் கழகத்தை தொடங்கியுள்ளேன். உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் எங்களது தாரக மந்திர கொள்கையாகும்.
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வது, இயற்கை விவசாயம், நீர்நிலைகளை பாதுகாப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, ஜனநாயகம், சகோதரத்துவம், சமதர்மம், அனைவருக்கும் கல்வி கிடைத்திடவும், தீவிரவாதம், வன்முறை தடுத்தல், ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்காக பாடுபடுவோம்.
கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்கள் உள்ளன. வெள்ளை வட்டத்திற்குள் பிரமிடு வடிவிலான கூம்பு சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலே உள்ள சிவப்பு நிறம் பலத்தையும், தியாகத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும்.
மஞ்சள் நிறம், மகிழ்ச்சியையும், வெற்றியின் அறிகுறியையும், மங்களத்தையும் எடுத்துரைப்பதாகும், நடுவில் உள்ள வெள்ளை நிற வட்டம் வெற்றியின் ஆரம்பமாகும். மேலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ ஆகிய மதங்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி மக்கள் நலம் பணியாற்றிட எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தை குறிக்கின்றது. மஞ்சள் இந்துக்களின் மங்கள நிகழ்ச்சிக்கு முதலாவதாக பயன்படுத்துவது மஞ்சள் ஆகும். வெண்மை நிறம் இஸ்லாமியர்களின் பிறையும், அந்த நட்சத்திரமும் வெள்ளை நிறத்தை அடிப்படையானது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக களமிறங்கும் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வோம். தேர்தலில் போட்டியிட சீட் எதுவும் கேட்கவில்லை. வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம்” என்றார்.