மாஸ்கோ – சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
சிரியாவில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, ஈராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கவில்லை.
அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. அதனால், சிரிய அரசு ஆதரவு படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் படைகளை திரும்ப பெற தொடங்குமாறு அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.