புதுடெல்லி – இந்தியாவில் 20 வருடங்களுக்கு முன்பு நுழைந்தது விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து நிறுவனம். இந்தியாவின் கடைகோடி கிராமத்தின் மளிகை கடைகள், பெட்டிக் கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும்படி செய்தது விக்ஸ் ஆக்ஷன் 500 நிறுவனம்.
எந்த நோய் என்றாலும் முதல் அறிகுறியாக வரும், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிக்கு இந்த மாத்திரையை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. இதைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள், அதிக ‘டோசேஜ்’ எனும் வேதிப்பொருள் காரணமாக, புழக்கத்தில் இருந்து வரும் சில மருந்துகளை தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ‘டோசேஜ்’ வேதிப்பொருள் கொண்ட 344 வகையான மருந்து உற்பத்தியை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக அந்தந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மனு அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரைகளை தயாரிக்கும், பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்ஷன் – 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், தங்களுடைய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இதேபோன்று கோரக்ஸ் என்ற இருமல் மருந்தை தயாரிக்கும் நிறுவனமும் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.