ஹாவானா – 48 மணி நேர வருகை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்டை நாடான கியூபாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகின்றார். இதற்கு முன் கடந்த 10 அமெரிக்க அதிபர்களில் யாரும் கியூபாவுக்கு வந்ததில்லை என்பதால், ஒபாமாவின் இந்த வருகை வரலாற்றுபூர்வ ஒன்றாகக் கருதப்படுகின்றது.
88 வருடங்களில் அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்கு வருகை தருவது இதுதான் முதன் முறை என்பதோடு, இத்தகைய வருகை ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு வரை கூட சரித்திர ஆய்வாளர்கள் கணித்திருக்கமாட்டார்கள்.
1959ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற அரசாங்கத்தை புரட்சியின் மூலம் வீழ்த்தி பிடல் காஸ்ட்ரோ கம்யூனிச அரசாங்கத்தை கியூபாவில் அமைத்தார். அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் முறிந்த நிலையிலேயே இருந்து வந்தன.
போப்பாண்டவரின் கியூபா வருகையின்போது அவரைச் சந்திக்கும் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையில் மீண்டும் தூதரக உறவுகள் ஏற்பட போப்பாண்டவர் பின்னணியில் செயல்பட்டார் என்றும் கூறப்படுகின்றது…
காஸ்ட்ரோ பதவி விலகியதும், புதிய அதிபராகப் பதவியேற்ற அவரது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ டிசம்பர் 2014இல் ஒபாமாவுடன் நடத்திய சந்திப்பொன்றின் வழி, தங்களுக்கிடையிலான நீண்ட கால பகைமையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தனர்.
கியூபா தலைநகர் ஹாவானா வந்தடைந்ததும், காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்தும் பழைய ஹாவானா நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒபாமா வலம் வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவும், காஸ்ட்ரோவும் இணைந்து காணப்படும் பதாகைகள் நாடு முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன.
இருநாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன.