தரம்சாலா – நாடு கடந்து வாழும் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்களின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகின்றது.
இவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவிலும், மற்ற அயல் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நடப்புத் தலைவரும், அவர்களின் ஆன்மீக குருவுமான தலாய் லாமா தலைவர் பதவியிலிருந்து போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வரும் திபெத் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற போராட்டத்தைத் திபெத்தியர்கள் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், திபெத் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகின்றது.
இன்றைய வாக்கெடுப்பின் மூலம் ஜனநாயக ரீதியான தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல திபெத்தியர்கள் முடிவெடுத்துள்ளனர்.
80 வயதான தலாய் லாமா தனது தலைமைத்துவ அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விட்டு, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரிடம் தனது அதிகாரத்தை வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். தலாய் லாமா அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றவராவார்.
தலாய் லாமாவின் உடல் நலக் குறைவு, இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டது ஆகிய காரணங்களுக்காக, அவருக்குப் பின்னரும் திபெத்தியர்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் இன்றைய ஜனநாயக வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
இன்றைய வாக்கெடுப்பின் மூலம் தங்களின் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்றும் திபெத்தியர்கள் நம்புகின்றார்கள்.