Home Featured இந்தியா கார்கில் பகுதியில், 12 அடி பனிமூடிய ஆழத்தில் தமிழ் இராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

கார்கில் பகுதியில், 12 அடி பனிமூடிய ஆழத்தில் தமிழ் இராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

755
0
SHARE
Ad

ஸ்ரீநகர் – : மூன்று நாட்களுக்கு முன்பு ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீட்புப் பணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏறத்தாழ 12 அடி பனி மூடிய ஆழத்தில் தமிழ் இராணுவ வீரரின் உடலைக் கண்டெடுத்தனர்.

பனிச் சரிவைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட அவர் விஜயகுமார் என்ற இராணுவ வீரர் என்றும், திருநெல்வேலி மாவட்டத்தின்  வல்லராம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மிகக் கடுமையான, சவால் நிறைந்த சூழலில் தங்களின் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த இராணுவத்தினர், மோப்ப நாய்களையும், புதை பூமிக்குள் தேடும் ஆற்றல் நிறைந்த ராடார் கருவிகளையும், உலோகங்களை உணர்தல் மூலம் கண்டு பிடிக்கும் கருவிகளையும் பயன்படுத்தி, கடந்த 3 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இறுதியில் 12 அடி ஆழத்தில் விஜயகுமாரின் உடலை இராணுவத்தினர் கண்டெடுத்தனர். “மோசமான வானிலை, 15 அடி உயரத்துக்கு பனிச்சரிவால் மூடப்பட்ட பனி என்ற சூழ்நிலையில் எங்களின் மீட்புப் பணி கடுமையான சவாலாக இருந்தது” என இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விஜயகுமாருக்கு பெற்றோர்களும், இரண்டு இளைய தங்கைகளும் இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகுமாரின் உடலை அவரது பூர்வீக கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றும் அங்கு முழு இராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தப் பனிச் சரிவைத் தொடர்ந்து முதல் நாளே தேடுதல் வேட்டையில் காப்பாற்றப்பட்ட சுஜித் என்ற இராணுவ வீரர் சீரான உடல் நலத்தோடு இருப்பதாகவும், அவர் துரிதமாக குணமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் போரில் உயிரிழப்பவர்களை விட, இதுபோன்ற பனிப்புயலில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் இந்த மரணங்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.