ஷா ஆலாம் – நாட்டில் மிகப் பெரிய அரசியல் செல்வாக்கு கொண்ட – அதே சமயத்தில் கொள்கை ரீதியாக முரண்பட்டு நிற்கும் முக்கியத் தலைவர்கள், இன்று “மக்கள் காங்கிரஸ்” என்ற மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றின் கீழ் ஒன்றிணைந்து பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக முழக்கமிட்டுள்ளார்கள்.
இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த முன்னாள் அம்னோ அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் (படம்) இந்தக் கூட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்தினார்.
கடந்த மார்ச் 4ஆம் தேதி நஜிப்புக்கு எதிராக பொதுமக்கள் பிரகடனத்தை துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டமாக இந்த மக்கள் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகின்றது.
இந்த மாநாட்டின் உச்சகட்ட அம்சமாக முன்னாள் பிரதமர் மகாதீரின் உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட முக்ரிஸ் மகாதீரை அவரது தாயார் கட்டியணைத்து முத்தமிடும் காட்சி – அருகில் அமர்ந்திருப்பது முக்ரிஸ் சகோதரி மரினா மகாதீர்...(படம்: நன்றி டுவிட்டர்)
நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் துணிச்சலுடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின், முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவர்கள் லிம் கிட் சியாங், பிகேஆர் துணைத் தலைவரும், சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி, அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு, மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர் லிங் லியோங் சிக், முன்னாள் விவசாய அமைச்சர் சனுசி ஜூனிட் ஆகிய அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
சமூக நலப் போராட்டவாதிகளான அம்பிகா சீனிவாசன், பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, மகாதீரின் மகள் மரினா மகாதீர், ஆகியோரும் இந்த மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.