கோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து புதிய விவரங்களை இன்று இரவு ‘ஃபோர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளது ஏபிசி (Australian Broadcasting Corporation) நிறுவனம்.
அந்நிகழ்ச்சியில், நஜிப்பின் வங்கிக் கணக்கில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையில், மலேசியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ‘தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்’ மூலம் பெறப்பட்டுள்ள நிதி குறித்த சில புதிய விவரங்கள் வெளியிடப்படவுள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்ட அப்துல் கனி பட்டேல், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக கிரிமினல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தத் தயாரானதை ஏபிசி உறுதிப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதோடு, அந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராகிம் மற்றும் ‘சரவாக் ரிப்போர்ட்’ நிறுவனர் கிளேர் ரீகேஸ்டில் பிரவுன் ஆகியோரும் பேட்டியளித்துள்ளனர்.
இவற்றோடு, ஏபிசி ‘ஃபோர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சி குழுவைச் சேர்ந்த நிருபர் லிண்டன் பெசெர் மற்றும் ஒளிப்பதிவாளர் லூயி எரோக்லூ ஆகியோர் நஜிப்பிடம் கேள்வி கேட்க முயற்சி செய்த போது கைது செய்யப்பட்ட காணொளியையும், ‘ஸ்டேட் ஆஃப் பியர்ஸ்’ என்ற பெயரில் ஏபிசி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.