கெய்ரோ – எகிப்து விமானத்தைக் கடத்தி வைத்திருப்பது அலெக்சாண்ட்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பிரிவின் பேராசிரியர் இப்ராகிம் சமாகா என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சைப்ரசில் இருக்கும் தனது முன்னாள் மனைவிக்கு 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் அந்நபர். பிரிந்த தனது மனைவியைக் காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது அவரைக் காண காவல்துறைப் பாதுகாப்போடு அவரது முன்னாள் மனைவி விமான நிலையம் விரைந்துள்ளார்.
இன்று நண்பகல் எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்த்ஏர் விமானம், இப்ராகிம் சமாகாவால் கடத்தப்பட்டு தற்போது சைப்ரஸ் லார்னாக்கா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதிலிருந்த பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பணியாளர்கள் என நம்பப்படும் மேலும் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சைப்ரஸ் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட விமானத்தில் 8 அமெரிக்கர்கள், உட்பட 21 வெளிநாட்டினர் இருந்ததாக அலெக்சாண்ட்ரா விமான நிலையத்தின் இயக்குநர் ஹோஸ்னி ஹசான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விமானத்தில் வெடிபொருள் எதுவும் இல்லை என்றும், தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இந்தக் கடத்தல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.