சென்னை – 92 வயதில் வழக்கமாக எல்லோரும் வீட்டில் – படுக்கையில் – அல்லது சாய்வு நாற்காலியில் முடங்கிக் கிடப்பார்கள். ஆனால், அடுத்த முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ – நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ – சளைக்காமல் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தயாராகி வருகின்றார் கலைஞர் கருணாநிதி.
நாளொரு அறிக்கையாக விடுத்துக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகள், ஆதரவு இயக்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது ஒருபுறமிருக்க, நவீன தகவல் ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் வழியாக, எப்போதும் தொடர்பில் இருப்பவரும் கலைஞர்தான்.
அவர் பிரச்சாரத்திற்கு தயாராவது ஒருபுறமிருக்க, அவருக்காக கோயம்புத்தூரில் பிரத்தியேகமாகத் தயாராகி விட்டது புதிய பிரச்சார வாகனம். பிரச்சாரத்திற்குரிய சகல வசதிகளோடும், கலைஞரின் உடல் நலத்திற்கேற்ற வகையிலும், தயாரிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் கலைஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தைப் பரிசோதித்துப் பார்க்க உடனடியாக அந்த புதிய பிரச்சார வாகனத்தில் ஏறி சென்னை நகரை ஒரு சுற்று சுற்றிவர நேற்று கிளம்பி விட்டார் கலைஞர். அந்தப் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டும் மகிழ்ந்திருக்கின்றார்.
சென்னை தெருக்களில் தனது புதிய பிரச்சார வாகனத்துடன் உலா வரும் கலைஞர்…