Home Featured நாடு புக்கிட் அமான் தடுப்புக் காவலில் ரபிசி ரம்லி!

புக்கிட் அமான் தடுப்புக் காவலில் ரபிசி ரம்லி!

566
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மாலை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி தற்போது புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரபிசி, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

Rafizi Ramli-parlimenஅதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் பிரிவு 8-இன்  கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதை காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்க இரகசியம் ஒன்றை தவறான முறையில் வெளியிடுவதை இந்த சட்டப்பிரிவு குற்றமாகக் குறிப்பிடுகின்றது.

#TamilSchoolmychoice

1எம்டிபிக்கும் ஆயுதப்படைகளின் நல நிதி நிர்வாக வாரியத்திற்கும் இடையிலான தொடர்புகளை கடந்த மாதம் ரபிசி வெளிப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் காவல் துறையின் வர்த்தகக் குற்றங்களுக்கான பிரிவிடமும் அவர் வாக்குமூலம் தந்திருந்தார்.

நாடாளுமன்றக் கட்டிடத்திலிருந்து இன்று வெளியே வந்த ரபிசி, தனது இரண்டு வயது மகனை, அவனைக் கவனித்துக் கொள்ளும் பராமரிப்பாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள சென்று கொண்டிருந்த போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என பிகேஆர் கட்சியின் இளைஞர் வியூக இயக்குநர் அக்மால் நசீர் மலேசியாகினி இணையத் தளத்திடம் தெரிவித்திருக்கின்றார்.

“எனது மகனைக் கூட்டிக் கொண்டு வீட்டில் விட்டு விட்டு, 7.30 மணிக்கு நானே போலீஸ் நிலையம் வருகிறேன்” என ரபிசி கூறியும் அவரைக் கைது செய்து காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் என அக்மால் நசீர் தெரிவித்துள்ளார்.

அமானா கட்சியின் கோல திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கமருல் பஹ்ரின் ஷா, ரபிசி கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தான் நேரடியாகப் பார்த்ததாகவும், அப்போது ரபிசியிடம் பேச முயன்றதாகவும், ஆனால் காவல் துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ இரகசிய ஆவணத்தை நாடாளுமன்ற வளாகத்தில் ரபிசி விநியோகித்திருந்தாலும், பத்திரிக்கையாளர்களிடம் அதனை விநியோகிக்கவில்லை.

ரபிசிக்கு ஆதரவாக இன்றிரவு அவரது ஆதரவாளர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே மெழுகுவர்த்திகளுடன் காத்திருக்கும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.